குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க கோரிக்கை | திருச்சி சட்டகல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டம்

92

பொள்ளாச்சியில் பெண்களை துன்புறுத்தி ஆபாச வீடியோ எடுத்த விவகாரத்தில் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சி பாலியல் பலாத்கார குற்றவாளிகள் மீது கடுமையான தண்டனை வழங்க வேண்டும், இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் தேவனாம்பட்டினம் தந்தை பெரியார் அரசு கல்லூரியை சேர்ந்த மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இதே போல்,நெல்லை சட்டக்கல்லூரி மாணவ – மாணவிகள் பொள்ளாச்சி பாலியல் பலாத்காரத்தை கண்டித்தும், குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வலியுறுத்தியும் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதே போன்று திருச்சியில் சட்டக்கல்லூரி மாணவ – மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட பேரணியாக சென்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் 50 மாணவர்களை கைது செய்தனர். இதனையடுத்து தங்களையும் கைது செய்யுங்கள் என்று போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கோஷம் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.