பறக்கும் படையினர் அதிரடி நடவடிக்கை : 11 லட்சம் ரூபாய் மற்றும் 300 க்கும் அதிகமான புடவைகள் பறிமுதல்

54

சேலம் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட 11 லட்சம் ரூபாய் மற்றும் முன்னூறுக்கும் அதிகமான புடவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

நாமக்கல் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட சங்ககிரி அருகே தேர்தல் பறக்கும் படையினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே சொகுசுக் காரில் சென்ற தனசேகரன் என்பவர் ஒரு லட்சம் ரூபாயும், சேலத்தைச் சேர்ந்த அழகுவேல் என்பவர் ஏழு லட்சத்து 94 ஆயிரம் ரூபாயும் வைத்திருந்தனர். அந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லை என்பதால் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் சேலம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட எடப்பாடியில் நடத்தப்பட்ட வாகன சோதனையில் ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட 3 லட்சத்து 18 ஆயிரம் ரொக்கப் பணமும், 4 கிலோ வெள்ளியும், 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 348 காட்டன் புடவைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவற்றை சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.