இன்று மாலை 5 மணிக்கு சபரிமலை கோயில் நடை திறக்கப்படும் | பாதுகாப்பு பணியில் 3 ஆயிரம் போலீசார்

86

மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படுவதால், 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கேரளாவில் உள்ள பிரசித்திப்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தின. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் 40க்கும் மேற்பட்ட சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், விசாரணையை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு தள்ளி வைத்துள்ளது. இந்த நிலையில் மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு, பூஜைகள் எதுவும் இல்லாமல் இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படுகிறது.

நாளை அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 17ம் தேதி வரை பல்வேறு பூஜைகள் வழங்கம்போல் நடைபெறும் என்றும், அன்றிரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட்டு மாசி மாத பூஜைகள் நிறைவடையும் என தேவஸ்தான போர்டு கூறியுள்ளது. இதனிடையே, மாசி மாத பூஜைக்காக இன்று முதல் சபரிமலைக்கு இளம்பெண்கள் வரலாம் என எதிர்பார்க்கப்படுவதால், 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கோயிலை சுற்றி 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளதால், போராட்டம் நடத்துவோர் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை எச்சரித்துள்ளது.