திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை ரூ.80 லட்சம் பறிமுதல் | மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தகவல்

100

நெல்லை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களில், உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 80 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. விதிமுறைகள்படி 50ஆயிரம் ரூபாய்க்கு மேல் உரிய கணக்கு இல்லாமல் எடுத்து செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் நெல்லை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான ஷில்பாபிரபாகர்சதீஷ், ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பதற்றமான வாக்குசாவடிகளாக 496 மையங்களும், மிகவும் பதட்டமான வாக்குச்சாவடிகளாக 32 மையங்களும் கண்டறிப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தபின் இதுவரை 80 லட்சம் ரூபாய் பணம் பறிதுல் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் ஷில்பாபிரபாகர்சதீஷ் தெரிவித்தார்.

இதே போல், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள காளிப்பட்டியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தனியார் பேருந்து ஒன்றில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 3 கிலோ வெள்ளிப் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதே போன்று சென்னையில் இருந்து திருச்செங்கோட்டுக்கு உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட இரண்டரைக் கிலோ வெள்ளிப் பொருட்களையும் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து பொருட்களை கொண்டு வந்த திருச்செங்கோட்டை சேர்ந்த பாலாஜி, சென்னையை சேர்ந்த விஜயகுமார் ஆகியோரிடம் தேர்தல் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.