மியான்மரில் வெடிமருந்து கிடங்கில் தீ விபத்து | 16 பேர் தீயில் கருகி உயிரிழப்பு

59

மியான்மரில் வெடிமருந்து கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 16 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயரிழந்தனர்.

மியான்மரின் கிழக்கு பகுதியில் சீனாவின் எல்லையையொட்டி உள்ள ஷான் மாகாணம், மாங்மாவோ நகரில் வெடிமருந்து அடைத்து வைக்கும் கிடங்கு உள்ளது. நேற்று முன்தினம் மாலை வெடிமருந்தை எடுத்துச் செல்வதற்காக 60-க்கும் மேற்பட்டோர் கிடங்குக்கு வந்தனர். அவர்கள் வெடிமருந்தை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென அங்கு வெடி விபத்து நேரிட்டது. அதனை தொடர்ந்து கிடங்குக்குள் தீப்பற்றி கொழுந்துவிட்டு எரிந்ததால் அங்கிருந்தவர்கள் வெளியேற முடியாமல் உள்ளே சிக்கிக்கொண்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஆனால் அதற்குள், 16 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 48 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.