திமுகவிற்கு மக்கள் நலன் மீது அக்கறை இல்லை – எடப்பாடி பழனிசாமி !!

47

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட திமுக எந்தவித முயற்சியும் மேற்கொள்ளவில்லை என விமர்சனம் செய்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மக்களின் பாதுக்காப்பை உறுதி செய்ய மீண்டும் பிரதமராக மோடி வர வேண்டும் எனவும் பரப்புரையாற்றினார்.

சென்னையில் அதிமுக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதிமுக சார்பில் போட்டியிடும் தென் சென்னை வேட்பாளர் ஜெயவர்த்தனை ஆதரித்து, சோழிங்க நல்லூர் பகுதியில் இன்று வாக்கு சேகரித்தார். அப்போது பரப்புரையாற்றிய முதலமைச்சர், காவிரி பிரச்சனைக்காக அதிமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தை முடக்கியவர்கள் என குறிப்பிட்டார். காவரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட திமுக எந்தவித முயற்சியும் மேற்கொள்ளவில்லை என விமர்சனம் செய்த முதலமைச்சர், திமுகவிற்கு எப்போதுமே ஆட்சி அதிகாரம் தான் முக்கியம் என்றும், அவர்களுக்கு மக்கள் நலன் மீது அக்கறையிலை என்றும் குறிப்பிட்டார்.

மக்களின் பாதுக்காப்பை உறுதி செய்ய மீண்டும் பிரதமராக மோடி வர வேண்டும் என கேட்டுக் கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எத்தகைய சூழலையும் எதிர்க்கொள்ளும் பிரதமர், மோடி மட்டுமே என புகழாரம் சூட்டினார். தொடர்ந்து பேசிய அவர், பல்நோக்கு மருத்துவமனை 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பள்ளிக்கரணையில் பணி நடைப்பெற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.

இதைத் தொடர்ந்து திருப்போரூரில் பரப்புரையாற்றிய முதலமைச்சர், நிலத்தடி நீரை உயர்த்தி விவசாயிகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கையை அதிமுக அரசு எடுத்து வருவதாகவும், ஏழை பெண்கள் பயன் பெற ஒரு சவரன் தாலிக்கு தங்கம் வழங்கப்படுவதாகவும் குறிப்பிட்டார். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் தேர்தல் முடிந்தவுடன் வழங்கப்படும் என்பதை நினைவு படுத்தி பேசிய முதலமைச்சர், 100 நாள் வேலை திட்டம் 200 நாளாக அறிவிக்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.